நீ........ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். இம்முறையும் இதைத்தான் எழுத வேண்டும் என்ற நோக்கமில்லாமல் நுழைகிறேன். கடந்த ஜூலை 12, வியாழன் , காலையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
காலை 06.50 மணிக்கு, வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தபோது யாரோ எனது அறையில் இருந்து போனதை பார்த்தேன். கான் ஹை என்று கேட்டுகொண்டே பிளாட்டின் வராண்டாவிற்கு வந்து பார்த்தால் யாரையுமே காணோம். சரி யாரோ நமது ஆட்கள் வந்திருக்கலாம் என்று நினைத்தாலும் வினாடிகளில் மறையக் காரணம் என்ன என்ற எண்ணத்தில் படிகளின் வழியாக வெகு வேகமாக கீழிறங்கி பார்த்தால் யாரையும் காணோம். வெளியே சென்று பார்க்கும் பொழுது ஒருவன் வேகமாக சாலையை தாண்டி பரபரப்பாக மறைகிறான். அப்பொழுதுதான் எனது அறையை பற்றிய நினைவு வந்தது. சாதாரணமாக அறையை என்றும் பூட்டியதில்லை. உடனே வாட்ச்மேனிடம் (அவரும் தமிழர், நமது நெருக்கத்திற்குரியவர்) விஷயத்தை சொல்லிவிட்டு, மேலே வந்து எனது அறையை பார்த்தால், ஓ வென்றிருந்தது. எனது தோஷிபா கணினி(I-5, 6GB RAM ), ஒரு E 72, ஒரு புத்தம் புதிய MICROMAX ஸ்மார்ட் போன்(ஒருவருக்கு பரிசளிப்பதற்காக வாங்கியது),2 கைக்கடிகாரங்கள் மற்றும் கொஞ்சம் பணம் ஆகியவை களவாடப் பட்டிருந்தது. அந்த காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. அய்யோ வென்று நான் போட்ட சத்தத்தில் அருகில் உள்ள நண்பர்கள் வந்தனர். ஆனால் நிலைமை கைமீறி போனதென்று எனக்கு தெரிந்தது. அந்த சமயத்தில் வாட்ச்மேன் எனது மடிக்கணினியை கொண்டு வந்தார். அது நான் திருடர்களை துரத்தியதால் கட்டிடத்தின் பிரதான வாசலில் கதவின் பின்னால் மறைத்து வைத்து விட்டு சென்று விட்டார்கள். அதன் பின்னர் காவல் துறைக்கு சென்றோம். அங்கு FIR பதிவு செய்ய வேண்டுமென்றால், IMEI நம்பர் வேண்டுமென்று கேட்டனர். நான் புதியதாக வாங்கியிருந்தேனே அதனுடைய ரசீதை காட்டினேன். ஆனால் IMEI நம்பர் இல்லாவிட்டால் FIR பதிவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர். சரி, கணினியில் கைரேகை உள்ளது, அதை வைத்து கண்டுபிடிக்கலாமே என்றபோது, கணினியில் ரசாயனம் தடவினால் கணினி கெட்டுப்போய்விடும் என்று சொல்லி அதற்கும் மறுத்து விட்டனர்.
உண்மையிலேயே பிரம்மை தட்டிப்போயிருந்தது எனக்கு. 2 மணி நேரம் கழித்து ரசீதை பார்த்தால், IMEI எண் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திரும்ப எனக்கு அங்கு போக விருப்பம் இல்லை. மடிக்கணினி திரும்பக் கிடைத்ததே பெரிய விஷயமாக தோன்றியது. அடுத்த சில வாரங்கள் வெறுமையாக கடந்தது, எனது E 72 இல்லாமல், கையில் கடிகாரம் இல்லாமல். தற்போதைக்கு இருக்கட்டும் என்று, சமீபத்தில், ஒரு கைகடிகாரம் வாங்கிவிட்டேன். E 72 இடத்தை நிரப்ப பொருளாதாரம் இடம் கொடுக்க வில்லையா இல்லை அந்த போனைத் தவிர வேறு எதிலும் மனம் ஈடுபடவில்லையா என்று தெரிய வில்லை, ஒரு மிகச்சிறந்த நண்பனை இழந்த ஒரு வேதனை எனக்கு கிட்டியது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையல்ல. நான் வேலைக்கு சேர்ந்த பின்னர் ஒரு வருடம் ஆனது அதை வாங்குவதற்கு. ஆனால் எனக்கு தெரியும் காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் அல்லது வேதனையின், இழப்பின் பாதிப்பை குறைக்கும் என்று.
இந்த விஷயத்தை இடுகையிட்டதன் நோக்கம் என்னவென்றால்,
1. அறையை பூட்டிவிட்டு செல்லவும், அருகிலே இருந்தாலும்.
2. முக்கியமான விஷயங்களை, பிரதி வைக்கவும். நான் எனது அனைத்து தொடர்புகளையும், குறிப்புகளையும் போனிலே வைத்திருந்தேன். அதை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
3. இங்கும் இது மாதிரியான செயல்கள் நடைபெறுகிறது என்பதை (ந)அன்பர்களுக்கு தெரிவிக்க.
முடிக்கும்முன் இரண்டு செய்திகள்.
1.அந்த திருடனின் விரல் ரேகை இன்னும் எனது மடிகணினியில் உள்ளது.
2. இந்த ப்ளாக்கில் தலைப்பில் கொடுத்த விஷயங்கள், இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே கொடுத்ததுபோல் உள்ளது.
மீண்டும் சந்திப்போம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக