புதன், 14 அக்டோபர், 2015

நண்பர்களுக்கு...... 

எப்படி இருக்கிறீர்கள்? 2012 ல் கடைசியாக நுழைந்தேன். தற்போதைய சூழ்நிலையில் 3 வருடங்கள் என்பது  முற்றும் புதியவனாகவே தோன்றுவேன் ...

2013 மற்றும் 2014 வருடங்கள் முற்றிலும் புதிய அனுபவங்களையும், வாழ்க்கையின் பன்முகங்களை உணரும் சந்தர்ப்பங்களையும் அளித்தது என்று கூறலாம்.

விரைவில் தொடர்ச்சியாக எழுத முயல்வேன்...

வாழ்த்துக்களுடன்.

புதன், 19 செப்டம்பர், 2012

SUNDARAPANDIAN

சுந்தரபாண்டியன் 

ஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காது - ஒரு பிரபலமான பழமொழி. அந்த வகையறாவில் இந்த ஆர்வக்கோளாறான பிளாக்கர் எழுதுவதையும் சேர்க்கலாம். சில நாட்களுக்கு முன் வெளியான சுந்தரபாண்டியனை பற்றி கொஞ்சம் எழுதலாம் அப்படீன்னு ஒரு ஆசை. படத்தில் எனக்கு தெரிந்த, நான் ரசித்தவைகளையே எழுதுகிறேன்.

டின்னர் முடிச்சுட்டு  உறக்கம் வருவதற்காக லேசா படத்தை ஓடவிட்டால் நமக்கே தெரியாமல் படத்தில் ஆழ்ந்து விட்டேன். சசிக்குமார் படங்களில் நட்பின் நடப்புகளை, காதலின் வேகத்தை பிரமாதமாக காண்பிப்பார். அந்த வகையில் அடுத்து ஒரு நட்பின் பரிணாமத்தை மிக இயல்பான ஒரு கதையை தன் சீடரை இயக்குனராக்கி அவர் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

5 நண்பர்கள். காதல். துரோகம். இதுதான் படத்தோட பிளாட். லேசா சுப்பிரமணியபுரம் வாசம் வந்து போறதை தவிர்க்க முடியல.

சற்றே ஒரு முதிர்ச்சி மட்டும் இல்லாதிருந்தால் ஒரு அற்புதமான நாயகனாக அவரால் இருக்க முடியும். ஆனாலும், படம் முழுவதும் இளமைத்துள்ளல் நிரம்பி வழிகிறது. நண்பனின் காதலுக்கு உதவப்போய் தானே காதலில் விழுவது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று, மேலும் அதரப்பழசான கதையும் கூட. ஆனால் தான் ஏற்கனவே காதலித்த, தன் காதலை மறுத்துவிட்ட பெண்ணை நண்பன் ஒருதலையாக காதலிக்க, அவனுக்கு உதவப்போவது புதிது. அந்த பெண், நாயகி, லக்ஷ்மி மேனன், தன்னைக் காதலிக்கிறாள் என்று நண்பனிடம் இயல்பாக சொல்லுமிடம் வெகு அழகு. படம் முழுவதும் வரும் இயல்பான நகைச்சுவையான வசனங்கள் படத்தைத் தொய்வின்றி கொண்டு செல்கின்றது. உதாரணம் - "தருதலையா போறதுக்கு எப்புடியெல்லாம் யோசிக்கிரானுங்க?".  "சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு". "ஏலத்துல இருந்து மாச கான்ட்ராக்டுக்கு போயிட்டானுங்கடி".

மாமன் மகளிடம் செய்யும் ரகளை, ரசிக்க வைக்கும் சரியான குறும்பு. இன்றும் நமது கிராமங்களில் இந்த விஷயங்கள் உள்ளது. அதேபோல, அந்த பாட்டி. சீயான் சீயான் என்று அமர்களப்படுத்தியிருக்கிறார்,

புது வரவு, லக்ஷ்மி மேனன் நிறைவாய் அழகாக நடித்திருக்கிறார். அதிகப்படியான ஒப்பனைகள் இல்லாமல் தெற்குப் பெண்ணாகவே காட்சி தருகிறார். நடிப்பிலும் அப்படியே. அப்பாவிடமிருந்து கல்யாணத்திற்கு சம்மதம் வந்தவுடன் ஓடிவந்து அப்பாவை கட்டிக்கொள்ளும் நடிப்பு நன்று. யாருப்பா அது அந்த தோழி? நம்ம பக்கத்து வீடு பெண் போல, நல்ல தேர்வு.

சூரி அள்ளுகிறார். மற்றபடி அப்புக்குட்டி, விஜய் சேதுபதி & இனிகோ பிரபாகரன் ஆகியோர் தமது பங்கை நிறைவேற்றியிருக்கிறார்கள். நரேன் கம்பீரமான பாசமான அப்பாவாக நன்றாக நடித்துள்ளார்.

இசை பரவாயில்லை. பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. தேனி, உசிலம்பட்டி வட்டாரத்து பழக்கங்களை அப்படியே காட்டியிருக்கிரார்கள்.

அப்புகுட்டியை தள்ளிவிட்டது சசிக்குமார் இல்லை என்று தெரியவருவது நல்ல ட்விஸ்ட். "குத்துனது நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது. அதாண்டா நட்பு" என்று சரியான பஞ்ச்  டயலாக் சொல்லி படத்தை முடிக்கிறார் சசிக்குமார்.

ஆனால் படம் முழுவதும் வரும் ஆல்கஹால் பாட்டில்களை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் சரியான ஜனரஞ்சகமான படம். ஆபாசமில்லாமல் படம் தந்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.




சனி, 15 செப்டம்பர், 2012

கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்கிறேன்

நீ........ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். இம்முறையும் இதைத்தான் எழுத வேண்டும் என்ற நோக்கமில்லாமல் நுழைகிறேன். கடந்த ஜூலை 12, வியாழன் , காலையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். 
காலை 06.50 மணிக்கு, வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தபோது யாரோ எனது அறையில் இருந்து போனதை பார்த்தேன். கான் ஹை என்று கேட்டுகொண்டே   பிளாட்டின் வராண்டாவிற்கு வந்து பார்த்தால் யாரையுமே காணோம். சரி யாரோ நமது ஆட்கள் வந்திருக்கலாம் என்று  நினைத்தாலும் வினாடிகளில் மறையக் காரணம் என்ன என்ற எண்ணத்தில் படிகளின் வழியாக வெகு வேகமாக கீழிறங்கி பார்த்தால் யாரையும் காணோம். வெளியே சென்று பார்க்கும் பொழுது ஒருவன் வேகமாக சாலையை தாண்டி பரபரப்பாக மறைகிறான். அப்பொழுதுதான் எனது அறையை பற்றிய நினைவு வந்தது. சாதாரணமாக அறையை என்றும் பூட்டியதில்லை. உடனே வாட்ச்மேனிடம் (அவரும் தமிழர், நமது நெருக்கத்திற்குரியவர்) விஷயத்தை சொல்லிவிட்டு, மேலே வந்து எனது அறையை பார்த்தால், ஓ வென்றிருந்தது. எனது தோஷிபா கணினி(I-5, 6GB RAM ), ஒரு E 72, ஒரு புத்தம் புதிய MICROMAX  ஸ்மார்ட் போன்(ஒருவருக்கு பரிசளிப்பதற்காக வாங்கியது),2 கைக்கடிகாரங்கள் மற்றும் கொஞ்சம் பணம் ஆகியவை களவாடப் பட்டிருந்தது. அந்த காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. அய்யோ வென்று நான் போட்ட சத்தத்தில் அருகில் உள்ள நண்பர்கள் வந்தனர்.  ஆனால் நிலைமை கைமீறி போனதென்று எனக்கு தெரிந்தது. அந்த சமயத்தில் வாட்ச்மேன் எனது மடிக்கணினியை கொண்டு வந்தார். அது நான் திருடர்களை  துரத்தியதால் கட்டிடத்தின் பிரதான வாசலில் கதவின் பின்னால் மறைத்து வைத்து விட்டு சென்று விட்டார்கள். அதன் பின்னர் காவல் துறைக்கு சென்றோம். அங்கு FIR பதிவு செய்ய வேண்டுமென்றால், IMEI நம்பர் வேண்டுமென்று கேட்டனர். நான் புதியதாக வாங்கியிருந்தேனே அதனுடைய ரசீதை காட்டினேன். ஆனால் IMEI நம்பர் இல்லாவிட்டால் FIR பதிவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர். சரி, கணினியில் கைரேகை உள்ளது, அதை வைத்து கண்டுபிடிக்கலாமே என்றபோது, கணினியில் ரசாயனம் தடவினால் கணினி கெட்டுப்போய்விடும் என்று சொல்லி அதற்கும் மறுத்து விட்டனர். 
உண்மையிலேயே பிரம்மை தட்டிப்போயிருந்தது எனக்கு. 2 மணி நேரம் கழித்து ரசீதை பார்த்தால், IMEI எண் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திரும்ப எனக்கு அங்கு போக விருப்பம் இல்லை. மடிக்கணினி திரும்பக் கிடைத்ததே பெரிய விஷயமாக தோன்றியது. அடுத்த சில வாரங்கள் வெறுமையாக கடந்தது, எனது E 72 இல்லாமல், கையில் கடிகாரம் இல்லாமல். தற்போதைக்கு இருக்கட்டும் என்று, சமீபத்தில், ஒரு கைகடிகாரம் வாங்கிவிட்டேன். E 72 இடத்தை நிரப்ப பொருளாதாரம் இடம் கொடுக்க வில்லையா இல்லை அந்த போனைத் தவிர வேறு எதிலும் மனம் ஈடுபடவில்லையா என்று தெரிய வில்லை, ஒரு மிகச்சிறந்த நண்பனை இழந்த ஒரு வேதனை எனக்கு கிட்டியது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையல்ல.  நான் வேலைக்கு சேர்ந்த பின்னர் ஒரு வருடம் ஆனது அதை வாங்குவதற்கு. ஆனால் எனக்கு தெரியும் காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் அல்லது வேதனையின், இழப்பின் பாதிப்பை குறைக்கும் என்று.

இந்த விஷயத்தை இடுகையிட்டதன் நோக்கம் என்னவென்றால்,

1. அறையை பூட்டிவிட்டு செல்லவும், அருகிலே இருந்தாலும்.
2. முக்கியமான விஷயங்களை, பிரதி வைக்கவும். நான் எனது அனைத்து தொடர்புகளையும், குறிப்புகளையும் போனிலே வைத்திருந்தேன். அதை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
3. இங்கும் இது மாதிரியான செயல்கள் நடைபெறுகிறது என்பதை (ந)அன்பர்களுக்கு தெரிவிக்க.

முடிக்கும்முன் இரண்டு  செய்திகள். 

1.அந்த திருடனின் விரல் ரேகை இன்னும் எனது மடிகணினியில் உள்ளது. 

2. இந்த ப்ளாக்கில் தலைப்பில் கொடுத்த விஷயங்கள், இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே கொடுத்ததுபோல் உள்ளது.

மீண்டும் சந்திப்போம். நன்றி.  

திங்கள், 9 ஜூலை, 2012


புத்தகங்கள்-2

இவ்வாறு தொடங்கி பிகேபி யின் காதல் வரிகளுக்கும், சுபாவின் எழுத்துக்கும் ரசிகனானேன்கல்லூரி நாட்களில் வந்தியதேவன் கண்ட பிறகு இதுவரை வேறு யாருக்கும் கதாநாயக இருக்கையை தர மனம் முன்வரவில்லை. இவைகள் எல்லாம் கடந்து, சமூக நாவல் வரிசையில் மனம் சென்றது. திரு. சுஜாதா அவர்களுக்கும்  திரு.பால குமாரன் அவர்களுக்கும் என் நன்றிகள். எனக்கு எழுதும் ஆசையைத்தூண்டிய கிரியா ஊக்கிகள் இவர்கள்தான். இவர்களுக்கும் கடிதம் எழுத ஆசைதான்ஆனால் என்ன எழுதுவது என்றுதான் புரிய வில்லைபடிப்பார்களோ இல்லையோ என்ற அவநம்பிக்கை வேறு. கடந்த ஏழெட்டு வருடங்களாக நான் படித்த மிகச்சில எழுத்துக்களுக்கு இவர்களே சொந்தக்காரர்கள். பொன்னியின் செல்வனுக்கு பிறகு, உடையார் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து கொண்டிருக்கிறது. ஆனால், படிக்க சமயம் கொடுக்க மனதில்லை. புத்தக வடிவில் இல்லாமல், எனது கணினியில் திரையில் உள்ளதாலோ என்னவோ?  மேலும், கடந்த 6 மாதமாக 15 நாவல்கள் என் பெட்டியில் உறங்குகின்றன.ஆனால் படிக்கும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கின்றேன். படியுங்கள், நல்லதை படியுங்கள், உங்கள் சந்ததிக்கு அதை பழக்கப்படுத்துங்கள். என் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சில புத்தகங்களை, கதாபாத்திரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜேஷ் குமாரின் விவேக் 
சுபா வின் ராணுவ கதைகள், செல்வா.
பிகேபியின் ரோஜா மலரே ராஜகுமாரி
கோ.வி.மணிசேகரனின் காஞ்சிக் கதிரவன் 

சுஜாதா  --  கணேஷ்--வசந்த், அனிதாவின் காதல்கள், கொலையுதிர்காலம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை. ஸ்ரீரங்கத்து தேவதைகள்(இணையத்தில் சுஜாதாவின் சிறுகதைகள் என்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அருமையான கதைகள்)

பாலகுமாரன்  - அப்பம் வடை தயிர்சாதம், தலையணை பூக்கள், என் கண்மணித் தாமரை,இரும்புக்குதிரைகள், சேவல் பண்ணை, பந்தயப்புறா, முன்கதை சுருக்கம், ஆனந்த வயல், திருப்பூந்துருத்தி & உடையார்.

சாண்டில்யன்  -- கடல் புறா, யவன ராணி, மன்னன் மகள், ராஜ முத்திரை.

கல்கி  - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்.

புத்தகங்கள் - 1


புத்தகங்கள் - 1 

படித்தல் என்பது ஜனரஞ்சக பத்திரிக்கைகளின் மூலம் எனக்கு பிடித்தலாகிப்போனது. 1980 களில் ஒரு மிகச்சிறிய கிராமத்தில் ஜனரஞ்சகப்பத்திரிக்கை என்பது வார இதழ்கள் , மாத இதழ்கள் மற்றும் நாவல்கள்தான். அதுவும் வாங்கும் சக்தி படைத்தவர்கள் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக அந்த புத்தகம் பயணப்படும். அச்சிறு வயதில் நான் வாங்க முடியாது. அவைகளை சிறுவயதினர் படிப்பதே குற்றம் என்ற பொதுவான கருத்து இருந்த நாட்கள் அது.

அந்த வகையில் நான் விதிவிலக்காக, எங்களுடைய வீட்டில் இருந்தே புத்தகங்கள் சென்றது. அதற்கு முக்கிய காரணம் எனது மாமா. வாரம் இரண்டு நாட்கள், சனி & ஞாயிறு , விடுமுறையில் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும் அவர் வருகையை ஆவலோடு நான் எதிர்பார்ப்பேன். காரணம், அவர் கொண்டுவரும் நாவல்களுக்காக. அவரை மிகவும் பிடிக்கும் என்பது பொதுவான விஷயம். எனக்கு பல விஷயங்களில் நல்ல வழிகாட்டியாக, என்மீது அக்கறை கொண்டவராக இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

விடுமுறை தினங்களில் ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஒருவகையான தண்டனை. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள புத்தகங்கள் மிகவும் உதவின என்று சொன்னால் மிகையல்ல. அதுவும் எனது ஆரம்பமே நாவல்களில் இருந்து தொடங்கியது. 4 ஆம் அல்லது 5 ஆம் வகுப்பு படிக்கும் சமயத்தில் ராஜேஷ் குமார் அவர்களது நாவல்கள் மூலம் தமிழை மிகச்சரளமாக கையாள முடிந்தது.(எனது கல்லூரி வகுப்புத்தோழனின் தாய்மாமா அவர் என்று என் நண்பனுடைய தமக்கை திருமணத்தில் அவரை சந்தித்தபோது ஆனந்த ஆச்சரியம்) எனது தொல்லை தாங்க முடியாமல் கல்கண்டு, முத்தாரம் (எத்தனை பேருக்கு தெரியும் அல்லது ஞாபகமிருக்கிறது?) என இரண்டு இதழ்கள் வீட்டிற்கு வரத்தொடங்கின. 

அந்த சமயத்தில்தான் குமுதத்தில் கடல் புறா தொடர்கதையாக  வந்துகொண்டிருந்தது. அந்த வயதில் நிச்சயமாக சாண்டில்யனின் எழுத்தின் மேல் ஈர்ப்பு வரவில்லை. விடலைப்பருவம் தாண்டிய பிறகு தேடித் தேடி சாண்டில்யன் எழுத்தை படித்தது வேறு விஷயம். நிறைய வார, மாத & மாதமிருமுறை என பத்திரிக்கைகள் தமிழகத்தை ஆண்ட காலம் அது. தாய், கல்கி, குங்குமம் ஆகிய ஆட்சிக்குப்பின் கே.பாக்யராஜின் பாக்யா ஒரு புரட்சியையே உண்டுசெய்தது எனலாம். ஆனந்த விகடன் விமர்சனம் என்றால்         எந்த டைரக்டரும் பயந்த காலகட்டம். விகடனில் 40 மதிப்பெண் என்றால் ஒரு மரியாதை என்றொரு நிலை இருந்தது. குமுதம் என்றால் கடல் புறா தவிர, 6 வித்தியாசங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பொழுது போகாத பொம்மு (என்னைப்போல்) ஒருவர். சிறுவர்களுக்காக என்றால் அம்புலிமாமா, பாலமித்ரா & கோகுலம் கதிர் ஆகியவைகள். இதில்,, கபீஷின் வால் மிகப்பிரபலம். எங்கே போனது இத்தனையும்??

சனி, 7 ஜூலை, 2012

படப்பதிவுகள் 

புகைப்படம் எடுத்தல் எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒரு சில விஷயங்களில் ஈர்ப்பு இருந்தது. அவற்றில் மிக முக்கியமானவைகளாக புகைப்படக் கருவியும், கீ போர்டும் (கல்லூரி பருவத்தில்) இருந்தது. ஒரு நல்ல புகைப்படக் கருவி வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் ஏறக்குறைய 25 வருடங்களாக புதைந்து கிடந்தது.

வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாமும் தந்து விடாது. இது என்னுடைய பார்வை. முயற்சிக்கும் மனப்பான்மை மட்டும் ஒருவருக்கு வெற்றியை தந்து விடுவதில்லை. பொருளாதார சூழ்நிலை, ஊக்குவித்தல் மற்றும் சமுதாய நிலை ஆகியவைகளே தூண்களாக நிற்கின்றன.

சென்ற வருடம் வரை எனது ஆசை வெறும் கனவாகவே இருந்தது, ஒரு சாதாரண ஒளிப்படக்கருவி கூட வாங்காமல். இப்பொழுது ஒரு ஒளிப்படக்கருவி என் கைகளில். ஆக நான் வாங்கும்பொழுது புகைப்படக் கருவியாக இருந்தது அறிவியல் முன்னேற்றத்தினால் ஒளிப்படக்கருவியாக மாறியது.(பிலிம் காலத்தில் ஆரம்பித்து டிஜிட்டல் காலத்தில் முடிந்தது).

சதி லீலாவதி படத்தில், கமல்ஹாசன் தன் மகனை, மனைவியாக நடித்த கோவை சரளாவிடம் சொல்லும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. " நம்ம புள்ள போன ஜன்மத்தில பாம்பாக பொறந்திருப்பானோ? இப்படி படம் பிடிக்கிறான்?" என்று கிண்டலாக கூறுவார். இதற்கும் என் பதிவிற்கும் உள்ள ஒரே விஷயம் ஒளிப்படக்கருவி மட்டும்தான். இது ஒரு இடைச்செருகல் மட்டுமே.

சரி, கேமரா விஷயத்திற்கு வருவோம்... 2010 ல் ஒரு சிறிய கேமரா, ஒரு 5000 ரூபாயில் வாங்கலாம் என்று ஆரம்பித்து, 2011 செப்டம்பர் வரை தேடும் படலமும் யோசனையும் வளர்ந்துகொண்டே போனது. யோசனை வளர வளர பொருளாதார முதலீடும் வளர்ந்து கொண்டே போனது தெரிந்தாலும் அதன் கடைசி எல்லை வரை போனது. ஒரு கட்டத்தில் இதுதான் வேண்டும் என்று தீர்மானித்தபோது, மயக்கமே வந்துவிட்டது. ஒரு சிறந்த சலுகை நாளில் வாங்கியும் வந்துவிட்டேன். அன்று இரவு தூங்கவில்லை. ஒரு சிறு குழந்தையின் சந்தோசமும் பிரமிப்புமாக அந்த இரவு போனது.

இடுகை நீண்டுகொண்டே போவதால் முதற் பகுதி என்று நினைத்து முடிக்கின்றேன்.








பின்குறிப்பு:: வெறுமே எவ்வித நிர்ணயமும் (செட்டிங்ஸ் ) இல்லாமல் எடுத்த சில படங்களை தருகிறேன்.. 
நல்ல விஷயங்கள் எவ்வளவோ வருகின்றன. ஆனாலும் கவனத்தை ஈர்ப்பதென்னவோ மற்றவைகள்தான். இன்றைய சூழ்நிலையில் கவனச்சிதறல்களுக்கு முக்கிய காரணமாக வலைத்தேடல்களை என்னால் குறிப்பிட முடியும். சமீபத்தில் அதிர்ச்சியான விஷயங்களும் கண்ணை குத்திவிட்டிருக்கிறது. அதுபற்றி வேறொரு நல்லநாளில் இடுகை இடவும் உத்தேசித்துள்ளேன்.

பல மாதங்களாக எனது ஒளிப்படக்கருவியின் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள நினைத்து நினைத்து,, நேற்று வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளேன். இனிவரும் நாட்களில் தொடர் பதிவுகள் இடலாம்.

பின்குறிப்பு:: இதுவே எனது முதல் இடுகை..