புத்தகங்கள் - 1
படித்தல் என்பது ஜனரஞ்சக பத்திரிக்கைகளின் மூலம் எனக்கு பிடித்தலாகிப்போனது. 1980 களில் ஒரு மிகச்சிறிய கிராமத்தில் ஜனரஞ்சகப்பத்திரிக்கை என்பது வார இதழ்கள் , மாத இதழ்கள் மற்றும் நாவல்கள்தான். அதுவும் வாங்கும் சக்தி படைத்தவர்கள் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக அந்த புத்தகம் பயணப்படும். அச்சிறு வயதில் நான் வாங்க முடியாது. அவைகளை சிறுவயதினர் படிப்பதே குற்றம் என்ற பொதுவான கருத்து இருந்த நாட்கள் அது.
அந்த வகையில் நான் விதிவிலக்காக, எங்களுடைய வீட்டில் இருந்தே புத்தகங்கள் சென்றது. அதற்கு முக்கிய காரணம் எனது மாமா. வாரம் இரண்டு நாட்கள், சனி & ஞாயிறு , விடுமுறையில் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும் அவர் வருகையை ஆவலோடு நான் எதிர்பார்ப்பேன். காரணம், அவர் கொண்டுவரும் நாவல்களுக்காக. அவரை மிகவும் பிடிக்கும் என்பது பொதுவான விஷயம். எனக்கு பல விஷயங்களில் நல்ல வழிகாட்டியாக, என்மீது அக்கறை கொண்டவராக இருந்தவர்களில் அவரும் ஒருவர்.
விடுமுறை தினங்களில் ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஒருவகையான தண்டனை. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள புத்தகங்கள் மிகவும் உதவின என்று சொன்னால் மிகையல்ல. அதுவும் எனது ஆரம்பமே நாவல்களில் இருந்து தொடங்கியது. 4 ஆம் அல்லது 5 ஆம் வகுப்பு படிக்கும் சமயத்தில் ராஜேஷ் குமார் அவர்களது நாவல்கள் மூலம் தமிழை மிகச்சரளமாக கையாள முடிந்தது.(எனது கல்லூரி வகுப்புத்தோழனின் தாய்மாமா அவர் என்று என் நண்பனுடைய தமக்கை திருமணத்தில் அவரை சந்தித்தபோது ஆனந்த ஆச்சரியம்) எனது தொல்லை தாங்க முடியாமல் கல்கண்டு, முத்தாரம் (எத்தனை பேருக்கு தெரியும் அல்லது ஞாபகமிருக்கிறது?) என இரண்டு இதழ்கள் வீட்டிற்கு வரத்தொடங்கின.
அந்த சமயத்தில்தான் குமுதத்தில் கடல் புறா தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. அந்த வயதில் நிச்சயமாக சாண்டில்யனின் எழுத்தின் மேல் ஈர்ப்பு வரவில்லை. விடலைப்பருவம் தாண்டிய பிறகு தேடித் தேடி சாண்டில்யன் எழுத்தை படித்தது வேறு விஷயம். நிறைய வார, மாத & மாதமிருமுறை என பத்திரிக்கைகள் தமிழகத்தை ஆண்ட காலம் அது. தாய், கல்கி, குங்குமம் ஆகிய ஆட்சிக்குப்பின் கே.பாக்யராஜின் பாக்யா ஒரு புரட்சியையே உண்டுசெய்தது எனலாம். ஆனந்த விகடன் விமர்சனம் என்றால் எந்த டைரக்டரும் பயந்த காலகட்டம். விகடனில் 40 மதிப்பெண் என்றால் ஒரு மரியாதை என்றொரு நிலை இருந்தது. குமுதம் என்றால் கடல் புறா தவிர, 6 வித்தியாசங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பொழுது போகாத பொம்மு (என்னைப்போல்) ஒருவர். சிறுவர்களுக்காக என்றால் அம்புலிமாமா, பாலமித்ரா & கோகுலம் கதிர் ஆகியவைகள். இதில்,, கபீஷின் வால் மிகப்பிரபலம். எங்கே போனது இத்தனையும்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக